Saturday, May 9, 2009

எங்கள் ஊர் - ஒரு அறிமுகம்

மேலநெடும்பூர் - காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இது காட்டுமன்னார்குடியிலிருந்து வடக்கே 9 கி.மீ தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து  தெற்கே 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலநெடும்பூரின் எல்லைகளாக கிழக்கே கீழநெடும்பூரும் மேற்கே கலியந்தூர்/நெய்வாசல் மற்றும் தெற்கில் விளத்தூர்/சோழக்கூர் வடக்கில் கொத்தவாசல் என செழிப்பான கிராமங்கள் சூழ அமைந்துள்ளது. பண்டைய சோழ வள நாட்டின் சோறுடைத்த கிராமம் இந்த மேலநெடும்பூர் என்பது என் யூகம். இது வரலாற்றில் எங்கேயானும் குறிப்பிடப்பட்டுள்ளதா என நான் அறியேன். யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமிடுங்களேன்.

இது ஒரு சிறிய கிராமம் சுமாராக 300 குடும்பங்கள் வசிக்கும் என்பது என் தோராய கணக்கு. எப்படியும் 1000 பேருக்கு மேல் வசிக்க வாய்ப்பில்லை. விவசாயம்தான் முக்கிய தொழில், பெரும் செல்வந்தர்கள் என சொல்லக்கூடிய அளவுக்கு எவருக்கும் அதிக அளவில் நிலம் கிடையாது, அதிகப்பட்சமாக 20 காணிக்கு மேல் இருக்காது ஒருவருக்கு. 

பெருந்தலைவர் காமராசர் கொடையளித்த ஒரு துவக்கப்பள்ளி உண்டு, ஆரம்ப காலங்களில் இந்த பள்ளி உள்ளூர் பெரும்சாதிக்காரர்களால் தவிர்க்கப்பட்டாலும் 1980களில் இதன் தரம் ஒரு அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்(திரு. செல்வராசு அவர்கள்) ஒருவரால் மிகவும்  உயர்த்தப்பட்டது. அது முதல் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்தும் சிறார்கள் இங்கு வரத் தொடங்கினர்.

என் இளமைப்பருவ காலங்களில் சாதிகள் இருந்தாலும் சாதீயம் அவ்வளவாக தலை தூக்கவில்லை, ஆனால் 1980களின் இறுதிகளில் இருந்து இங்கும் சாதி வாரி அரசியல் தலை தூக்கியது, மருத்துவர் அய்யா ராமதாசும் அண்ணன் திருமாவளவனும் அந்த பெருமையை தேடிக்கொண்டார்கள். என் பதிவுகள் பெரும்பாலும் 1990களூக்கு முன் நடந்த நிகழ்வுகளைப்பற்றியதாக மட்டுமே இருக்கும்,  ஏனெனில் 1987க்குப் பிறகு உயர்கல்வி மற்றும் வேலை நிமித்தம் காரணமாக என் கிராமத்துக்கு நான் விருந்தாளியானேன்.

எனக்குத்தெரிந்துதான் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி வந்தது, முதல் பேருந்து ஒரு தனியாரின் வண்டி 'ராஜா டிரான்சுபோர்ட்' என்ற பெயரில் 1979 அல்லது 80 வாக்கில் வந்ததாக ஞாபகம்.  இது சிதம்பரம் To  மா. உடையூர் சென்று வந்தது, இந்த வழித்தடம் இன்றும் உள்ளது ஆனால் பேருந்தின் பெயர்தான் (ராஜா,அகச்தியர்,சரவணா..) மாறி மாறி இப்போ ஏதோ ஒரு பெயரில் இன்றும் வசூல்ராஜாவாக வலம் வருகிறது, அடுத்து அரசு பேருந்து 'தந்தை பெரியார்' 1984 அல்லது 1985ல் வந்ததாக ஞாபகம். இதன் தடம் எண் 22 (சிதம்பரம் டு காட்டுமன்னார்குடி)இன்று அரசுப் பேருந்தாக பெயர் மாறினாலும் இன்றும் இளமையாக தன் பயணத்தை தொடர்கிறது. 

மற்ற விவரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்.

No comments:

Post a Comment