Sunday, May 10, 2009

எங்கள் ஊர்'வலம்'

கடந்த பதிவின் தொடர்ச்சியாக எங்கள் ஊரின் வனப்பை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

வடக்கிலிருந்து வந்தால் சாவடி மதகை தாண்டிதான் வர வேண்டும், இந்த சாவடி மதகு வீராணம் ஏரியிலிருந்து வரும் வாய்க்காலின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்தான் எங்கள் ஊர் மற்றும் கீழ நெடும்பூர்,மெய்யாத்தூர் கிராமங்களின் விவசாயத்திற்கான உயிர் நாடி. 

இந்த மதகு பன்முகம் கொண்டது வாகனங்களூக்கும் பாதசாரிகளுக்கும் பாலமாகவும், விவசாயிகளுக்கு கதிர் அடிக்கும் களமாகவும் என் போன்ற சிறுவர்களுக்கு குதித்து விளையாடும் சறுக்கு மதகாகவும் அவ்வப்போது இதன் பயன்பாடு மாறும். 

அப்படியே உள்ளே வந்தால் அங்கிருந்துதான் ஊரின் எல்லை ஆரம்பிக்கிறது. சாலைக்கு இடப்புறம் ஒரு சிமெண்ட் பலகை ஊரின் பெயரை தாங்கி நிற்கும். வலப்புறத்தில் ஒரு பத்து வீடுகள் கொண்ட ஒரு சிறிய காலனி ஒன்று இருக்கும், அந்த காலகட்டத்தில் மின்சார வசதி கிடையாது இந்த தெருவிற்கு. (இந்த மின்சாரமும் ஒத்தை விளக்கும் பற்றி தனி பதிவே போடலாம்.) இன்று வந்ததா என எனக்குத்தெரியாது.
இந்த காலனிக்கு தனியாக பெயர் ஏதும் இல்லை, சாவடித்தெரு என்றுதான் சொல்வார்கள்.

அப்படியே வந்தால் மூக்காயி முக்குட்டு (மூக்காயி என்பவரின் வீடு இந்த முனையில் இருப்பதால் இந்த பெயர் என்று நினைக்கிறேன்) வரும் அங்கிருந்துதான் நிறைய வீடுகள் தென்படும். இங்கிருந்து சில வீடுகள் தள்ளி இடது புறம் ஒரு சின்ன சாலை செல்லும் இதுதான் பெரிய தெரு செல்லும் வழி. இந்த தெருவில் ஒரு சுமாராக 100 குடும்பங்கள் வசிப்பார்கள்.  

அடுத்து வருவது 'சாணாமுட்டு தெரு' (சாண மேட்டு தெரு மருவி இப்படி ஆகியிருக்குமோ) இங்குதான் ஒரு சமூகத்தை சேர்ந்த பெருவாரியான மக்கள் வசிக்கிறார்கள்.
இந்த தெருவின் முடிவில் மணத்தொறை(மண்துறை) இங்கிருந்துதான் அடுத்த சமூக மக்கள் வசிக்கிறார்கள்.

சிவன் கோயில் தெரு இங்கு பிள்ளைமார் மற்றும் அய்யர்கள் வசித்தனர், இன்றைய தேதியில் எவரும் இல்லை இங்கே. இவர்களின் வீடுகள் இன்று படையாண்ட வழி வந்தவர்களின் கைமாறி அவர்கள் இங்கே வசிக்கிறார்கள்.

இந்த சிவன் கோவில் தெரிவில்தான் எங்களின் தற்போதைய வீடு உள்ளது. ஆனால் எனக்கு பிடித்தமான நான் சிறுவனாய் குழந்தையாய் தவழ்ந்த வீடு அடுத்த தெருவில் உள்ளது. அவ்வீடு பற்றி அவ்வப்போது ஆங்காங்கே சொல்வேன்.

இந்த சிவன் கோவில் தெருவிற்கு எதிரில்தான் மிகப்பெரிய சிவன் கோவில் உள்ளது, இந்த கோயில்தான் நீங்கள் படத்தில் காண்பது. 

இந்த கோவில் பற்றி ஏராளமான நினைவுகள் என்னிடம் உண்டு. இது வெறும் கோவில் மட்டுமன்று, விவசாயிக்கு மழை நாளில் கொடவுனாகவும், எல்லா நெல்லையும் இந்த கோயிலில்தான் கொட்டி உலர்த்துவார்கள், வெயில் காலங்களில் நாங்கள் இளைப்பாறவும், விழாக்காலங்களில் நாங்கள் கொண்டாடவுமான ஒரு நினைவுச்சின்னம், இன்று பாழடைந்து போனாலும் ஒரு காலத்தில் மிகவும் சிறப்புற்று இருந்தது, இந்த கோயிலுக்கு முன் இரண்டு பெரிய மகிழம் மரம் இருந்தது அவைதான் இந்த கோவிலுக்கு அழகு, நான் 10 ஆம் வகுப்பு ஒரு மரம் வீழ்ந்தது அடுத்த மரமும் சில வருடங்களூக்குப் பிறகு விடை பெற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment