Saturday, September 5, 2009

மேலநெடும்பூர் - தொடரும் ஊர்மணம்..

கடந்த பதிவில் மணம் கமழும் மகிழம் மரம் வீழ்ச்சி பற்றி வருந்தி விளம்பியிருந்தேன். இனி தொடர்வோம்..

இந்த சிவன் கோவில் எதிரே ஒரு பெரிய குளம் உள்ளது , இங்குதான் நான்
'ஓரி ஒரி எல்லாருக்கும் போட்டேன்
உனக்குமட்டும் போடல'
எனப்பாடி நான் நீச்சல் கற்றது. அந்த நாட்கள் மிக மகிழ்ச்சியானவை எருமை மாடுகள் மூழ்கி கிடக்கும் சித்திரை வெயிலில் நாங்களும் இந்த குளத்தில் பல மணி நேரம் குதியாலம் போடுவோம். எருமை மாடுகளின் தலையில் நிறைய பூச்சிகள் இருக்கும் அவற்றை தலையில் ஏந்தி மற்றவர்களின் தலையில் விடுவது ஒரு வகை விளையாட்டு. பெரிய பெரிய ஆட்களெல்லாம் இந்த 'ஓரி' விளையாட்டில் பங்கெடுப்பார்கள். நாங்கள் விளையாட்டை முடித்து வரும் போது குளத்தை ரெண்டாக்கியிருப்போம். இன்றைய தேதியில் இந்த குளம் மீன் வளர்க்கும் குட்டையாக மாறி குளிக்க தகுதியற்றதாக மாறிவிட்டது.

இந்த குளத்திற்கு கிழக்கே ஒரு பெத்தான் கோயில் உள்ளது இங்கும் ஒரு குட்டை(சிறிய குளம்) உள்ளது, இங்கு யாரும் குளிக்கமாட்டார்கள் ஒரு காலத்தில் குடி தண்ணீர் இங்கிருந்துதான் எடுப்பார்கள் என்று நான் கேள்விபட்டிருக்கிறேன். இந்த இடத்தில் ஒரு அய்யனார் குதிரை இருக்கும் நல்ல உயரம் சுமார் 10 அடி உயரம் இருக்கும்(இன்னும் இருக்கான்னு தெரியல). இந்த குதிரைக்கு கீழேதான் திருட்டு சீட்டு கட்டு விளையாடுவோம், புகையிலை பேப்பரை பணமாக பந்தயம் கட்டி விளையாடுவோம். இந்த இடங்களையெல்லாம் ஒளிப்படமாக எடுத்து வைக்கவேண்டும் என்பது என் ஆவல், என்ன செய்ய அந்த கால கட்டத்தில் இதற்கான பொருளாதர வசதியும், இந்த இடங்களெல்லாம் ஆவணப்படுத்தப்படவேண்டியவை என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டதில்லை. இந்த கோயிலிருந்து பார்த்தால் கீழநெடும்பூர் கிராமம் தெரியும் இங்கிருந்து நடந்தால் குறுக்கே 1/2 மைல் தூரம்தான் இருக்கும்.









1 comment:

  1. நல்ல முயற்சி நண்பரே தொடருங்கள்
    நானும் ஓரி விளையாட்டைப் ப்ற்றி படங்களுடன் என் வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன் முடிந்தால் பாருங்கள்
    http://mankavuchi.blogspot.com

    ReplyDelete